×

அனைவரும் இரட்டை முகக்கவசம் அணியுங்கள்!: உமிழ் நீர்த்துளி மூலம் கொரோனா 30 அடி தூரம் பயணிக்கும்..மத்திய அரசு எச்சரிக்கை..!!

டெல்லி: கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நபரிடம் இருந்து ஏரோசால் எனப்படும் நுண்ணிய நீர் துகள்கள், 30 அடி தூரம் வரை காற்றில் கொண்டுச் செல்லப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் டாக்டர் கே.விஜயராகவன் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிகுறிகள் முற்றிலும் இல்லாதவர்கள் கூட கொரோனா பரவ காரணமாக இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இருமல் மற்றும் தும்மல் மூலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரிடம் இருந்து உமிழ் நீர்த்துளிகள் சாதாரணமாக 6 அடி தூரத்திற்கு பரவும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏரோசால் எனப்படும் நுண்உமிழ் நீர்த்துகள்கள் 30 அடி தூரம் வரை காற்றில் கொண்டுசெல்லப்படுவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
பாதிக்கப்பட்ட நபரின் உமிழ்நீர், நாசி நீர்த்துளிகள் மற்றும் ஏரோசால்கள் மூலமாக தான் கொரோனா வைரஸ் அதிகளவில் பிறருக்கு பரவி வருவதாக தலைமை அறிவியல் ஆலோசகரின் ஆவணம் தெரிவித்துள்ளது. எனவே கதவுகளின் கைப்பிடிகள், மின் விளக்கு, மின்விசிறி சுவிட்சுகள், டேபிள்கள், நாற்காலி, தரை ஆகியவற்றை பிளீச் மற்றும் பினாயில் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
காற்று மூலமாக தொற்று ஏற்படுவதை தடுக்க இரட்டை முகக்கவசங்கள் அல்லது N – 95 தர முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முகக்கவசங்கள், தனிமனித இடைவெளி, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது போன்றவை மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றியை பெற்றுத்தரும் என மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் டாக்டர் கே.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

The post அனைவரும் இரட்டை முகக்கவசம் அணியுங்கள்!: உமிழ் நீர்த்துளி மூலம் கொரோனா 30 அடி தூரம் பயணிக்கும்..மத்திய அரசு எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Corona ,Central Govt ,Delhi ,Dinakaran ,
× RELATED உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள...